வவுனியா மாநகரசபையை விமர்சித்த உறுப்பினர்
வவுனியா மாநகர சபை மக்கள் விரோத சபையாகவும் மண்கொள்ளை சபையாகவும் மாறி வருகிறது என வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று(10.09.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சோலை வரி தொடர்பில் முதல்வர் தன்னிச்சையாகவும், சர்வதிகாரமாகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது எனது கருத்து. வவுனியா மாநகரசபை மக்கள் விரோத சபையாகவும், மண்கொள்ளை சபையாகவும் மாறி வருகிறது.
ஊழியர்களின் சம்பளம்
சபையில் உள்ள எதிர்கட்சி உறுப்பினர்கள் 10 பேரின் கருதுக்களை கேட்காது அவர்களது உறுப்புரிமைக்கு மதிப்பளிக்காது முதல்வரும், அவருடன் இணைந்தவர்களும் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றனர்.
ஏனைய சொத்துக்களின் வருமானத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்காது ஆதன வரியை மட்டும் அதிகரித்துள்ளனர். மக்கள் நலனுக்காகவும், மக்களுக்காகவும் எனக் கூறி மக்களிடம் இருந்து அதிக ஆதனவரி அறவிட்டு மக்களை பொருளாதார சுமைக்குள் தள்ளியுள்ளனர்.
வவுனியா மாநகரசபை, 2024இல் நகரசபையாக இருக்கும் போது 24 மில்லியன் ரூபாய் வருமானம் சோலைவரியால் மட்டும் வந்துள்ளது. மொத்த வருமானம் 337.2 மில்லியன் ஆகும். சோலை வரி மாநகரசபை முதல்வரால் 8, 10 வீதம் என உயர்த்தப்பட்டுள்ளது.
எம்மால் 5, 8 வீதம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் கருத்துப்படி சோலை வரியால் மட்டும் 272 மில்லியன் ரூபாய் வருமானமாக வருகின்றது. முன்னைய சோலை வரி வருமானத்தை விட 250 மில்லியன் அதிகமாக கிடைக்கிறது.
அரசாங்கம் மாநகரசபை ஊழியர்களின் சம்பளத்தில் 40 வீதத்தை மாநகரசபை செலுத்த வேண்டும் எனக் கூறிய காரணத்தால் தான் சோலைவரியை குறைக்க முடியவில்லை என தெரிவித்தார்.
பொருளாதார சிக்கல்கள்
அது முற்று முழுதான பொய். மாநகரசபை கொடுக்கினற சம்பளம் 100 மில்லியன் என்றால் அவர்கள் 40 மில்லியன் ரூபாய் தான் செலுத்த வேண்டியுள்ளது.
அரசாங்கமே மெதுவாகத் தான் தான் சம்பளத்தை கொடுக்க சொல்லியுள்ளது. 40 மில்லியனுக்காக 272 மில்லியனை அறவிடுகிறார்கள். எமது நாடு செல்வந்த நாடா? 30 வருட யுத்தத்திறகு முகம்கொடுத்த தேசத்தின் மக்கள், பொருளாதார சிக்கல்களையும், எதிர் கொண்டு பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளனர்.
மாநகரசபையின் சோலை வரி மக்கள் மீது திணிக்கப்படுகிறது. தான் அதிக வாக்குகள் பெற்று வந்ததாகவும் அதனால் மாநகரத்தை காபற் வீதியாகவும், வடிகாலமைப்பை செய்யவும் அதிக பணம் தேவை என்கிறார். மககள் பசியுடன் இருக்கும் போது காபற் வீதியில் நின்றால் பசி போகுமா?
அபிவிருத்தி அடையத் தான் வேண்டும். அதற்காகவே மக்கள் எம்மை அனுப்பி வைத்துள்ளார்கள். எமது மக்கள் பாதிக்காத வகையில் அதனை கொண்டு செல்ல வேண்டும். மக்களை பாதிக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும். வரிச்சுமையை குறைக்க வேண்டும். தன்னிச்சையாக பழிவாங்கும் போக்கை நிறுத்த வேண்டும். நாம் மக்களுக்காக பயணிப்போம்.
மாநகரசபையில் சொத்துக்கள் மற்றும் வருமானம் இருக்கிறது. நாடாளுமன்றத்திலிருந்து மாகாண சபைக்கு நிதிகள் வருகின்றன. அவற்றை கொண்டு இன்னும் முன்னேற்ற முடியும். அபிவிருத்தி செய்ய பல வழிகள் உள்ளது. வரியை உயர்த்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




