525 வகை மருந்துகள் முடிந்து விட்டன:வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கும் நிலைமை
கொழும்பு மருந்து விநியோக பிரிவில் 525 மருந்து வகைகள் மற்றும் 5 ஆயிரத்து 376 சத்திர சிகிச்சை பொருட்களின் கையிருப்பு முடிவடைந்துள்ளதன் காரணமாக இனி வரும் நாட்களில் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிப்புக்கு உள்ளாகும் என அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ விநியோக பிரிவில் கையிருப்பில் இருந்த ஆயிரத்து 358 மருந்து வகைகளில் 525 மருந்துகளும், 8 ஆயிரத்து 553 சத்திர சிகிச்சை பொருளில் 5 ஆயிரத்து 376 பொருட்களும் தீர்ந்து போயுள்ளன.
இதனடிப்படையில், 38.7 வீத மருந்துகளும், 62.9 வீத சத்திர சிகிச்சை பொருட்களும் தீர்ந்து போயுள்ளன. மொத்தமாக மருந்து விநியோக பிரிவில் கையிருப்பில் இருக்க வேண்டிய 50 வீதமான மருந்து மற்றும் சத்திர சிகிச்சை பொருட்கள் தீர்ந்து போயுள்ளன.
6 வகையான உயிர் காப்பு மருந்துகள், 239 அத்தியவசிய மருந்துகள், அரிதாக தேவைப்படும் 280 மருந்து வகைகள்,சத்திர சிகிச்சைக்கு தேவையான 2 ஆயிரத்து 721 பொருட்கள் தீர்ந்து போயுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் பீ. திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.
அரச மருந்தாளர்கள் சங்கம், ஆறு மாதங்களுக்கு முன்னர் பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் முன்கூட்டியே அறிவித்து, இப்படியான நிலைமை ஏற்படும் என எச்சரித்து இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் எந்த தரப்பும் சாதகமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என்பதால், தற்போது வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.



