உலக புத்தக தலைநகராக கொலம்பியாவின் மெதிலின் நகரம் தெரிவு
யுனெஸ்கோ அமைப்பு, 2027ஆம் ஆண்டிற்கான 'உலக புத்தகத் தலைநகராக' கொலம்பியாவின் மெதிலின் (Medellín) நகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஏழு தசாப்தங்களில் அந்த நகரில் புத்தகக் கடைகளின் எண்ணிக்கை 542% உயர்ந்துள்ளதோடு, நாட்டின் வாசிப்புப் பட்டியலில் அந்த நகரம் முதலிடம் வகிப்பதையும் கருத்தில் கொண்டு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் காவல் நிலையங்களை நூலகங்களாகவும் புத்தகக் கடைகளாகவும் மாற்றியமைத்த மெதிலின் நகரத்தின் கலாசார மாற்றத்தை யுனெஸ்கோ பாராட்டியுள்ளது.
2024இல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்
வன்முறைகள் நிறைந்த வரலாற்றைக் கொண்ட இந்த நகரம், தற்போது புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் மூலம் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு சர்வதேச முன்மாதிரியாகத் திகழ்கிறது.
யுனெஸ்கோவின் பொதுப் பணிப்பாளர் காலேத் எல்-எனானி இது குறித்துக் கூறுகையில், மெதிலின் நகரின் இந்த மாற்றம் கலாச்சாரம் எவ்வாறு அமைதியைக் கட்டமைக்கும் என்பதற்கு ஒரு வலிமையான சான்று என்று குறிப்பிட்டார்.

2027 ஏப்ரல் 23ஆம் திகதி உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தன்று இதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கி ஓராண்டு காலம் நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கதை சொல்லும் கலைகளை மேம்படுத்தும் பல்வேறு பொதுக் கொள்கை நடவடிக்கைகள் அந்நகரில் முன்னெடுக்கப்படும்.
2001ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த கௌரவத்தைப் பெறும் 27வது நகரம் மெதிலின் என்பது குறிப்பிடத்தக்கது. யுனெஸ்கோ அமைப்பால் 2026ஆம் ஆண்டிற்கான உலக புத்தகத் தலைநகராக மொராக்கோ நாட்டின் தலைநகரான ரபாத் (Rabat) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஏப்ரல் 23ஆம் திகதி (உலக புத்தக தினம்) முதல் ரபாத் நகரம் இந்தப் பொறுப்பை ஏற்கும். இதற்கு முன்னதாக 2024இல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) நகரமும், 2025இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.