ஜனாதிபதியின் செயலாளருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் முக்கிய கலந்துரையாடல் (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 9ஆம் திகதி தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ள நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரசு கட்சியுடனான ஜனாதிபதியின் இந்த தனிப்பட்ட சந்திப்பு ஊடாக கிழக்கை ஓரம்கட்டும் முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாக அரசியல் தரப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்நிலையில் ஜனாதிபதியுடன் இடம்பெறும் வடக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அழைக்கப்படாவிட்டால் குறித்த கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு மற்றும் 11,12,13 நடைபெறவுள்ள சந்திப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சாள்ஸ் நிர்மலநாதனின் வலியுறுத்தல்
இந்நிலையில் ஜனாதிபதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதாக கூறி வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் தனியாக சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி நாட்டில் இல்லாததால்,அவருடைய செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவிக்கையில்,“வடக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் 9ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்பு தொடர்பில் நான் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவிடம் கலந்துரையாடினேன்.
இதன்போது சமன் ஏக்கநாயக்க, இது அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு, இதை ஒவ்வொரு மாகாணமாக கலந்துரையாடினால் இலகுவாக இருக்கும் என கூறினார்.
அப்போது சாள்ஸ்,இது அபிவிருத்தி தொடர்பான கூட்டமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் 9ஆம் திகதி அரசியல் தீர்வு தொடர்பாக நடைபெறும் சந்திப்புக்கு எம்மை அழைக்க வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒரே கட்சி என கூறியுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் சமன் ஏக்கநாயக்க, நீங்கள் கூறுவது சரி. எனக்கு 11,12,13, ஆம் திகதிகளில் நடைபெறும் சந்திப்பு தொடர்பில் தெரியப்படுத்தினார்கள். 9ஆம் திகதி நடைபெறும் சந்திப்பு பற்றி தெரியாது.
இருப்பினும் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என கூறியதாக சாள்ல் தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்குமா...!
மேலும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் என்றால் அதில் ஏனைய கட்சிகளும் உள்ளடங்க வேண்டும். அதாவது டக்ளஸ் போன்றவர்களின் கட்சிகளும் அந்த சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும்.
ஒருவேளை 9ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பை கூட்டமைப்பிலுள்ள வேறு யாரும் ஜனாதிபதியிடம் கோரியிருக்கலாம்.
இதேவேளை கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சந்திப்பிற்கு அழைக்கப்படாவிட்டால் நாம் அந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள மாட்டோம் என செல்வம் அடைக்கலநாதன், ஜனா எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் திருப்பம்
மேலும் இந்த விடயத்தை பெரிதாக்குவதற்கு அப்பால், வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தனி தனியாக சந்திக்கும் நடைமுறையை உருவாக்க விரும்பவில்லை என சாள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு-கிழக்கு சார்ந்த அரசின் அநீதிகளுக்கும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளுக்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்கும் ஒருவராக சாள்ஸ் இருப்பதுடன் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிகளவு கருத்துக்களை தெரிவிக்கும் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினரகளுள் ஒருவராக காணப்படுகின்றார்.
இதனடிப்படையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி நாட்டிற்கு திரும்பியதும் வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளும் வகையில் சந்திபொன்றை ஏற்பாடு செய்து, திகதி தொடர்பான அறிவிப்பை வழங்குவதாக உத்தரவாதமளித்துள்ளார்.