சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்! புளொட் மற்றும் ரெலோ வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பிற்கோ அல்லது அதற்கு முன்னதாக சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறும் சந்திப்புக்கோ எமக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று புளொட் மற்றும் ரெலோ அறிவித்துள்ளது.
இது தொடர்பில் புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் எதிர்வரும் 9அம் திகதி அவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெறவிருப்பதாக அறியமுடிந்தது.
அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் இது குறித்த கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ள போதிலும், அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் அச்சந்திப்பில் என்னால் கலந்துகொள்ள முடியுமா என்று உறுதியாக கூறமுடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் வெளியிட்ட தகவல்
இது தொடர்பில் ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியுடான தமிழரசுக்கட்சியினுடைய சந்திப்பு குறித்தோ, அதற்கு முன்னரான ‘சம்பந்தன் இல்லத்தில் இடம்பெறும்’ சந்திப்புக் குறித்தோ எமக்குத் தெரியாது. அது குறித்து எமக்கு எந்த விதமான உத்தியோகபூர்வ அழைப்பும் கிடைக்கவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ள திட்டமிடல் சந்திப்பு தொடர்பாக தான் செல்வம், சித்தார்த்தன் ஆகியோருக்கு அறிவிப்பு விடுத்துள்ளதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.