ஜனாதிபதியுடனான சந்திப்பில் சாணக்கியன் பங்கேற்பு!
ஜனாதிபதி, கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை என்பது பொய்யான கருத்தாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று (07.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ஒரு சந்திப்பிற்கான நேரத்தை ஒதுக்கியுள்ளார்.
சம்பந்தன் இல்லத்தில் கூட்டம்
இந்தக் கூட்டத்திலே நாங்கள் எதைப்பற்றிப் பேசப்போகின்றோம் என ஆராய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 8ஆம் திகதி சம்பந்தன் இல்லத்திலே சந்திக்கவிருக்கின்றோம்.
இதைப்பற்றி கருத்து தெரிவித்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு பற்றி தெரியாது.
என்ன விளக்கம் என்றே தெரியாதவர்கள் தான் அறிக்கை விடுகின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் இருப்போருக்கு அழைப்பில்லையென்பது பொய். அந்த சந்திப்பில் நானும் கலந்துகொள்ளவிருக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற பல பிரச்சினைகளைப் பற்றி நான் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்தபோதும் கூறியிருக்கின்றேன். விஷேடமாக வனஇலாகா சம்பந்தப்பட்ட விடயங்கள்.
காணி அபகரிப்பு
கடந்த 1985ஆம் ஆண்டில் இருந்தவாறு வனஇலாகாவிற்குரிய காணிகளை வழங்கப்படும் என்று கூறியிருந்தாலும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தொல்பொருள் பிரச்சினைகளைப் பற்றி கூறியபோது குறிப்பாக திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திலே 30ற்கும் அதிகமான புதிய பௌத்த வணக்கஸ்தலங்கள் உருவாக்கப்பட்டிருப்பதைப்பற்றி ஜனாதிபதியிடம் கூறியபோது அவர் அதை நடத்தும் விகாராதிபதியை தான் கண்டிப்பதாக சொல்லியிருந்தார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. வடக்கு மற்றும் கிழக்கிலே இருக்கின்ற இவ்வாறான பல பிரச்சினைகள் பற்றி ஆராயவிருக்கின்றோம். ஜனாதிபதியின் சந்திப்பில் கலந்துரையாடவுள்ளோம்.
இந்த சந்திப்பிற்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை என்பது தவறான கருத்தாகும்.
ஜனாதிபதியயின் சந்திப்பு பற்றி கருத்து தெரிவிப்போருக்கு உண்மையில் இந்தச் சந்திப்பு பற்றி எதுவும் தெரியாது போலவே தெரிகின்றது எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.