இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி பாரிய பேரணி - இஸ்லாமாபாத்தில் குவிக்கப்பட்ட இராணுவம்
முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான்கானை சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பாரிய பாதயாத்திரை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்திலிருந்து கடந்த ஞாயிற்றுகிழமை ஆரம்பமான இந்தப் போராட்டம், பல்வேறு பகுதிகளைக் கடந்து தலைநகரை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொஹைல் அப்ரிடி தலைமையில் பேரணி
இந்த பேரணியை கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சொஹைல் அப்ரிடி தலைமைத் தாங்கி நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, இந்தப் போராட்டக்காரர்களை எக்காரணம் கொண்டும் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசாங்கம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாகத் தலைநகரின் முக்கியமான அரச கட்டடங்கள், நாடாளுமன்றம் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதிகள் கப்பல் கொள்கலன்கள் கொண்டு முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
அங்கு ஆயிரக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் குவிப்பு
அரசாங்கத்திற்கும் இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாகாண அரசாங்கம் ஒத்துழைக்க மறுப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள போதிலும், தங்கள் மீது தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாக பி.டி.ஐ. கட்சி பதிலளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்தின் மூலம் இம்ரான் கான் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், 2023 மே மாதம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே முறுகல் நிலை நீடித்து வருகின்றது. தற்போதைய பதற்றமான சூழலால் பாகிஸ்தான் தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.