திலினி பிரியமாலியை சிறையில் பாதுகாக்கும் பிரபல அரசியல் குடும்பம்!பின்னணியில் வெளியான தகவல்
நிதி மோசடி தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் பின்னணியில் செயற்பட்டவர் வர்த்தகர் ஜானகி சிறிவர்தன என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மிகப்பெரிய அரசியல் குடும்பமொன்று திலினி பிரியமாலியை சிறையில் இருந்து பாதுகாப்பதாக அவர் கூறியுள்ளார்.
மறைக்கப்பட்ட பணம்
இவ்வாறான அனைத்து மோசடிகளும் இடம்பெறும் போது மத்திய வங்கி கண்களை மூடிக்கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும், மோசடி செய்யப்பட்ட பணம் இன்னும் மறைந்துவிடவில்லை, மறைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜானகி சிறிவர்தன சுதந்திரமாக இருக்கும் வரை இந்த விசாரணைகளை முறையாக மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் நீதியமைச்சராக இருந்திருந்தால் விஜயதாச ராஜபக்சவைப் போன்று திலினியின் வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தனது மகனை அனுப்பியிருக்கமாட்டேன் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திலினி பிரியமாலிக்கு வர்த்தகர்களை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் ஜானகி சிறிவர்தன என்ற பெண்ணை கைது செய்வதற்கு சீ.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
