மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! குற்றப்புலனாய்வு பிரிவில் குவியும் முறைப்பாடுகள்
பல கோடி ரூபா பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி செய்த மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் இன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது 5 விசேட பிரிவுகளின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியை வாடகை அடிப்படையில் எடுத்து சொகுசு அலுவலகம் நடத்தி இந்த நிதி மோசடிகளை செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீதான முதல் முறைப்பாடு ஆகஸ்ட் 27ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது.
மில்லியன் கணக்கான நிதி மோசடி
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டு பெறுமதியான காசோலைகளை வழங்கி நிதி மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆடை நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் இந்த முறைப்பாட்டை செய்திருந்த நிலையில், மே மாதம் 3 ஆம் திகதி தனது நண்பரான முன்னாள் ஆளுநரின் வீட்டுக்குச் சென்ற போது அங்கிருந்த மற்றுமொரு நபர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை அறிமுகம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த மே மாதம் 4 ஆம் திகதி முன்னாள் ஆளுநரின் அறிவித்தலின் பிரகாரம் சந்தேகநபருக்கு 126 மில்லியனுக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டதாக முறைப்பாட்டாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி, மீண்டும் பணம் வழங்கப்படாமல், பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றி வந்ததாகவும், அவருக்கு காசோலைகள் வழங்கப்பட்டதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட பண மோசடி
கடவத்தை பிரதேசத்தில் உள்ள ஒருவரை அழைத்து பணத்தை விரைவில் தருவதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த நபர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார். பின்னர், அவர் வழங்கிய காசோலைகளில் கணக்கில் பணம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் கூறியுள்ளார்.
இதன்படி, திட்டமிட்ட பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன்,இது தொடர்பாக பல சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த பண பரிவர்த்தனைகள் தொடர்பான பல தகவல்களும் வெளியாகியுள்ளன.
அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்குச் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் சந்தேகநபர் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனியார் வங்கிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அத்துடன், சந்தேகநபரான திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் மோசடி தொடர்பான கணக்கு விபரங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக 750 மில்லியன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் மற்றுமொரு வர்த்தகரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
பிரபல அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி சொகுசு வாழ்க்கையை நடத்தி இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.