பிரபல வர்த்தகர்களிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! விசாரணையில் வெளியான தகவல்
பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த குறித்த பெண் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் ரூபா பெறுமதியான இலங்கை பணத்தை மோசடியாக பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய பெண் அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம் மோசடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் நிறுவம் ஒன்றை நடத்தி வந்த பெண்ணை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) கைது செய்து இன்று (06) கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், 60,000 அமெரிக்க டொலர், 100,000 அவுஸ்திரேலிய டொலர் மற்றும் தங்க நகைகளையும் மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் வெளி நாடுகளில் பண வைப்பு மற்றும் வேறு தொழில்களில் பணத்தை வைப்பிலிட்டு இலாபகரமான பணத்தை வழங்குவதாக கூறி கொழும்பில் ஒரு நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.
அவரது நிறுவனத்தில் கோடீஸ்வர தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் வைப்புகளை செய்திருப்பது தற்போதைய பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்ட தகவல்
குறித்த பெண் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டு பணத்தை மீள வழங்காமல் ஏமாற்றியதாக வந்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 07 இல் உள்ள தனது சொகுசு வீட்டை விற்று குறித்த வர்த்தகர் பெண்ணுக்கு இந்த தொகையை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் வட்டித்தொகை கிடைக்காத காரணத்தினால் குறித்த வர்த்தகர் சந்தேகநபரிடம் இதுபற்றி வினவிய போது அவர் 239 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.பின்னர், அவை விலைமதிப்பற்ற காசோலைகள் என்பது தெரியவந்தது.
மேலும்,வெளிநாட்டவர்களுக்கு இரத்தினக்கற்களை விற்று வெளிநாட்டு நாணயங்களை மாற்றி மற்றுமொரு வர்த்தகரை இந்த பெண் மோசடி செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு பணம் தேவைப்படுவதாக கூறி குறித்த வர்த்தகரிடம் சந்தேகநபர் பணத்தை பெற்றுள்ளார். மேலும், அவருக்கு பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் பிரதிவாதியின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபரான திலினி பிரியமாலியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பெண் ஆளுநராக பதவி வகித்த அரசியல்வாதி ஒருவரிடமிருந்து 80 கோடி ரூபாவை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த பெண் பலம்பொருந்திய நடிகரான அரசியல்வாதி ஒருவரிடம் இருந்து 7.5 கோடி ரூபாய் பெற்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.