"நான் விடை பெறும் காலம் தூரமில்லை!" - 'பேஸ்புக்'கில் மனோ உருக்கமான பதிவு
நான் விடை பெறும் காலம் தூரமில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் முகநூலில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"அன்பார்லி மென்டரி லங்வேஜ்” (Unparliamentary Language) என்று பொதுவாகச் சொல்வார்கள். சபையில் பயன்படுத்த “கூடிய, கூடாத” வார்த்தைகள் என்று இருக்கின்றன ஒருமுறை இன்று அமைச்சராக இருக்கும் ஒரு இடதுசாரி எம்பி, பிரதமர் ரணிலை மிக மோசமான சிங்கள கெட்ட வார்த்தையில் சபையில் திட்டினார்.
பதிலுக்கு ரணில் தூஷணம் பயன்படுத்தவில்லை. தூஷணம் பேசிய எம்.பியைப் பார்த்து, “காய்ந்த பூசணிக்காய்” எனக் கிண்டலாகச் சொன்னார். ரணிலிடம் நம்ப முடியாத நகைச்சுவை உணர்வு இருக்கின்றது. என்னிடம் அது எக்கச்சக்கமாகக் கொட்டிக்கிடக்கின்றது.
"தூஷணம்" என்பது மட்டுமல்ல, “எல்லை மீறிய” வார்த்தைப் பிரயோகங்களும், "அன்பார்லிமென்டரி”தான். சமீபத்தில், கொழும்பில் கோவிடினால் மூடப்பட்டிருந்த பிரதேச குடும்பங்களுக்கு, ஒரு வாரத்துக்கு 5000/= ரூபா வழங்க வேண்டும் என நான் வாதிட்டபோது, இன்றைய அமைச்சர் ஒருவர் என்னை “மடையா” (மோடயா) என்று திரும்ப, திரும்பத் திட்டினார். நான் பதற்றப்படாமல், நான் கூறியதை மாத்திரம் திரும்ப, திரும்பக் கூறினேன்.
கடைசியில் மக்களுக்கு அந்த ரூ. 5000/= பெருவாரியாகக் கொழும்பில் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சபையிலிருந்த எனது நண்பர்கள் என்னையும், அந்த அமைச்சரை நோக்கிக் கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்யும்படி சொன்னார்கள்.
நான் அப்படி முறை தவறி வார்த்தைகளைப் பயன்படுத்த மறுத்து விட்டேன். சபையில் மட்டுமல்ல, பொதுவாக நான் கண்ணியக் குறைவான வார்த்தைகளை எங்கேயும், சொல்லாலும், எழுத்தாலும் பயன்படுத்துவதில்லை.
பல நூற்றுக்கணக்கான தமிழ், சிங்கள, ஆங்கில நேரலை ஊடக நிகழ்வுகளில் நான் பங்குபற்றியுள்ளேன். அங்கே வாதிடும்போது அடிக்கடி உணர்ச்சிவசப்படுவேன்.
அதுதான் நிகழ்ச்சியை உயிரூட்டமாக ஆக்கும். ஆனால், வரம்பு மீறிய வார்த்தைகளை எந்த மொழியிலும் நான் பேசியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் எனக்குத் தூஷணம் மற்றும் முறை தவறான தமிழ் வார்த்தைகள் தெரியாது.
ஆகவே, தனிப்பட்ட உரையாடலிலும்கூட என்னிடமிருந்து தூஷணம் வராது. நான் என்னை இழந்தது ஒருமுறைதான். அது ஒரு தனியார் ஊடக நிகழ்வில் நடந்தது. அதுவும், என்னைப் பற்றி என்ன கூறப்பட்டிருந்தாலும் நான் சிரித்துக்கொண்டே ரணிலைப் போன்று நகைச்சுவையாக ஏதாவது பதில் கூறியிருப்பேன்.
அன்று, அந்த ஒரு அரசியல்வாதி நிதானம் இழந்து, எமது சமூகத்தைத் தரந்தாழ்த்தி பேசிய போது, பலமுறை அந்த சொல்லாடலை வாபஸ் வாங்கச் சொல்லியும் கேட்காததால், அவரை “குளிரவைத்து” அமைதியாக்கினேன். ஆனால், அதுவும்கூட என் மனதை அவ்வப்போது உறுத்தும்.
தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும், அவரை நோக்கி நட்புடன் எப்போதும் நான்
இதற்காகவே புன்முறுவல் புரிகின்றேன். நான் விடை பெறும் காலம் தூரமில்லை.
எனக்குப் பின்னாலே வரும் இளையோர் எம்மைப் பார்த்துப் படிக்க ஏதாவது இருக்க
வேண்டுமே...! - என்றுள்ளது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
