மன்னாரில் வீதி அமைக்கும் செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்படவில்லை: மக்கள் குற்றச்சாட்டு
மன்னாரில் அண்மைய வருடங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பல வீதி அமைக்கும் செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்படாது முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களங்கள் மன்னாரில் எந்த பிரயோசனமும் இன்றி செயற்படுவதாகவும் அதில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் பணிகளை ஒழுங்காக நிறைவேற்றாது சம்பளங்களை மட்டும் பெற்றுக்கொண்டு இருப்பதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பூரணப்படுத்தப்படாத வீதிகள்
மன்னார் நகர் பகுதியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாழ்வு பாடு வீதி,மன்னார் தலைமன்னார் வீதி,சாந்திபுரம் வீதி,கோந்தைபிட்டி வீதி,தபாலகம் தொடக்கம் மன்னார் பிரதான புகையிரத நிலைய வீதி, எழுத்தூர் தரவான் கோட்டை வீதி, மன்னார் வவுனியா வீதி என எந்த வீதிகளும் ஒழுங்கான முறையில் பூரணப்படுத்த படாமலும் அமைக்கப்படாமல் காணப்படுவதாக அவ் வீதிகளை பயன்படுத்தும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த அதிகார சபைகளின் செயற்பாடு சம்பந்தமாக மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பொது மக்களால் கேள்விகள் எழுப்பப்படும் போது அக் கூட்டங்களில் வேலைகள் நடைபெறுவதாகவும் நிதி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் வேலை நடைபெறும் என பொய் வாக்குறுதிகளை தெரிவிப்பதாகவும் ஆனால் கடைசி வரை அந்த செயற்திட்டங்கள் இடம் பெறுவதில்லை எனவும் அதிகாரிகள் மக்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் வழங்கி தப்பிக்கலாம் என திட்டமிட்டு கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
மக்களின் கோரிக்கை
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் பல வீதிகளில் பயணிக்க முடியாத நிலையே காணப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் குறித்த திணைக்களங்களின் மாகாண பணிப்பாளர்களோ அரச எரிபொருட்களில் அரச சொகுசு வாகனங்களில் திரிகிறார்களே தவிர மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எந்த ஒரு அக்கரையும் செலுத்துவதாக இல்லை என குற்றம் சுமத்துவதுடன் விரைவில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் பெறும் சம்பளத்திற்கு நியாயமாக பூரணப் படுத்தாது,பயன்படுத்த முடியாத பாதைகளை புணர் நிர்மாணம் செய்ய முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னாரில் பல மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை,வீதி அபிவிருத்தி திணைக்களங்களினால் அமைக்கப்பட்ட பல வீதிகள் உரிய விதமாக அமைக்கப்படாமலும், பூரணப்படுத்தப்படாமலும், ஒழுங்கான முறையில் கண்காணிக்கப்படாமலும் வெடிப்புக்களுடன் நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்ற நிலையில் குறித்த வேலைத்திட்டங்களை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனக்கள் செயற்திட்டங்களை பூரணப்படுத்தாமலேயே நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
