போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட வைத்தியசாலை சாரதி பணி நீக்கம்
மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியின் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர் காவு வண்டியின் சாரதி இன்று(02.10.2023) பதவி நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என வைத்திருந்த 179 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றுடன் கடந்த சனிக்கிழமை (30.09.2023) பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இதேவேளை குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிகளை தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான காவு வண்டி சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன் மற்றய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த காவு வண்டியின் சேவை இரண்டு நாட்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்று மன்னார் சுகாதார விசாரணைக் குழுவினாரால் முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் போது சாரதியின் வாகனம் மற்றும் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

