சீனாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய வரி
சீனா பிறப்பு விகிதத்தை உயர்த்தும் முயற்சியாக, இன்று முதல் கருத்தடை சாதனங்களுக்கு 13வீதம் வரி விதித்துள்ளது.
அத்துடன், குழந்தை பராமரிப்பு சேவைகள், திருமண சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
புதிய வரி
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலையில், கடந்த 2024-ல் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 9.54 மில்லியன் மட்டுமே என்ற அளவில் பதிவாகியுள்ளது.
அதிக செலவு, வேலை, குடும்ப சமநிலை சிக்கல், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் இளைஞர்கள், யுவதிகள் குழந்தை பெற தயங்குகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசின் இந்த புதிய நடவடிக்கையானது, பிறப்பு விகிதத்தை உயர்த்துவதை விட, அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சி என நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளில் அரசு அதிகமாக தலையிடுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை கருத்தடை சாதனங்களுக்கு வரி விதிப்பது தேவையற்ற கர்ப்பம் மற்றும் சமூக நோய் பரவல் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கலாம் என்றும் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வரி மாற்றங்கள் இருந்தாலும், குழந்தை வளர்ப்பின் போது உயர்ந்த செலவு மற்றும் பொருளாதார அச்சம் தீர்க்கப்படாவிட்டால், பிறப்பு விகிதம் அதிகரிப்பது கடினம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.