நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் - வீதியை மாற்றி பயணம் செய்த மஹிந்த
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை கட்டடத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
குருநாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனது மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறந்து வைக்க வீதியை மாற்றி பிரதமர் பயணித்ததாக தெரிய வருகிறது.
பிரதமரின் பிரத்தியேக செயலாளர் ரோஹித ராஜபக்ஷவின் பங்கேற்புடன் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் நேற்றைய தினம் ரோஹித ராஜபகஷ பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு பொறுப்பை ரோஹிதவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர், தனது ஒருங்கிணைப்புக் காரியாலயத்தை திறப்பதற்காக நாரம்மல-குருநாகல் பிரதான வீதிக்கு வரவிருந்தார். எனினும் எரிபொருள் வரிசைகளால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக யந்தம்பலாவ சென்றடைந்துள்ளார்.
நாரம்மல பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பிரதமரின் வாகனத் தொடரணி அலவ்வ ஊடாக நாகலகமுவ அதிவேக வீதி நுழைவாயிலில் மத்திய அதிவேக வீதிக்குள் பிரவேசித்து யந்தம்பலாவை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.