வாடகை வீட்டுக்கு செல்ல தயாராகும் மகிந்த.. மருத்துவ நிலைமைகளால் சிக்கல்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய உரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றத் தயாராகி வரும் நேரத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஜனாதிபதிகள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட ஒரு உத்தியோகபூர்வ இல்லம் இருக்காது என்பதால் முன்னாள் ஜனாதிபதியின் தரப்பினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாதுகாப்பு நிலைமைகள்
அதன்படி, அவர் தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாகவும் அரசியல் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, மெதமுலானையில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல அவர் விரும்பினாலும், அவரது மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை பெறுவதில் ஏற்பட்ட சிரமத்தையும், கொழும்புக்கு கணிசமான தூரம் பயணிப்பதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு அவர் வாடகை வீட்டுக்கு செல்லும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் தங்குவதற்கு பொருத்தமான வீடுகள் குறித்து பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு நிலைமையை அவர்கள் இன்னும் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரது குழந்தைகளுக்கு வீடுகள் இருந்தாலும், அவர்களின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து உறுதியாக இருக்க முடியாததால், அவர்கள் அத்தகைய இடங்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.
எனவே, தற்போதைக்கு கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் அவர் வசிப்பதற்குப் பொருத்தமான மாளிகையொன்றைத் தேடிக் கண்டறிவதில் அவரது பாதுகாப்புப் பிரிவு மற்றும் தனிப்பட்ட பணியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்த மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



