அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சரிடம் அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் யார் விடுதலை செய்யப்பட உள்ளனர்? எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர்? என்பதை நீதி அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விஜயதாச ராஜபக்சவின் கருத்து
“தமிழ் அரசியல் தலைமைகள் கேட்டுக் கொண்டதற்கமைய அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்” என அமைச்சர் விஜயதாச ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய தமிழ் அரசியல் தலைமைகள், எந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரினார்கள்? அரசாங்கம் எதன் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவுள்ளது? என சிறையில் வாடும் அரசியல் கைதிகள் கேட்பதோடு இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் மீண்டும் தவற விடக்கூடாது.
அத்துடன் அரசியல் கைதிகளை அரசாங்கமும் தமிழ் தலைமைகளும் இனியும் ஏமாற்றக்கூடாது என்று அரசியல் கைதிகள் கோருவதோடு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும், சர்வதேச அமைப்புகளும் இலங்கை ஆட்சியாளர்களிடம் அரசியல் கைதிகள் தொடர்பிலும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பிலும் கடந்த காலங்களில் அரசாங்கத்திற்க்கு பல்வேறு பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்த போதும் இலங்கையின் ஆட்சியாளர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவுமில்லை அவற்றிற்கு மதிப்பளிக்கவுமில்லை.
அது மட்டுமன்றி கடந்த காலத்தில் அரசு நியமித்த LLRC ஆணைக்குழு அரசியல் கைதிகள் சம்பந்தமாக தெரிவித்த ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டவில்லை.
ஆனால் அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கும், சர்வகதியில் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் கூட்டத்திற்கு முகம் கொடுப்பதற்கும் அரசியல் கைதிகள் இந்த விடயத்தை கையிலெடுப்பதை நாம் அறிவோம்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் மீதான தடைநீக்கம்
அரசியல் கைதிகள் நாட்டில் இல்லை என்பது தான் இவர்களின் பொது நிலைப்பாடு. தற்போது நாடு பொருளாதார ரீதியில் படு பாதாளத்தில் விழுந்துள்ளது. அரசியல் ரீதியில் ஸ்திர தன்மையற்ற நிலையும் தோன்றியுள்ளது.
இதன் காரணமாகவே தடை செய்யப்பட்ட அமைப்புகளினதும் நபர்களினதும் தடை நீக்கும் செயற்பாடு அதனை சார்ந்தே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான செய்தியும் வெளிவந்துள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விடயங்களை ஆராயும் ஆணைக்குழு கடந்த 2022 ஏப்ரல் 11ஆம் திகதி மேகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த போது "பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டவர்கள் மற்றும் தண்டனை கைதிகள் விடயத்தில் ஒன்றும் செய்ய இயலாது" எனக் கூறியுள்ளனர்.
சிறு குற்றம் செய்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்
அதேபோன்று விஜயதாச ராஜபக்ச சிறு குற்றம் செய்தவர்களே விடுதலை செய்யப்படுவர் எனக் கூறியுள்ளார். இவர்கள் சிறு குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவது யாரை? அவ்வாறானால் இப்போது ஆட்சியாளர்கள் யாரை விடுதலை செய்யப் போகிறார்கள்? நீண்ட காலம் அதாவது ஐந்து வருடங்கள் தொட்டு 26 வருடங்கள் வரை சிறையில் வாடுவோரும் உள்ளனர்.
இவர்கள் விடுதலை செய்யப்பட போவதில்லை என்பதுவே உண்மை. கடந்து 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல்வேறு கால கட்டங்களில் புலிகளின் மீளுருவாக்கம் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தனர் என கைது செய்யப்பட்டோர் உள்ளனர்.
இவர்கள் அநியாயமாக செய்யப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்படுவதன் நோக்கம் அரசியலாகும்.
தெற்கை தமிழ் மக்களுக்கு எதிராக வைத்திருப்பதற்கும், பயங்கரவாத சட்டத்தையும் அவசரகால சட்டத்தையும் தொடர்ந்து நாட்டில் வைத்திருப்பதற்கும் ஆட்சியாளர்கள் இவ்வாறான வழிகளை கையாளுகின்றனர்.
எதன் அடிப்படையில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை
இவ்வாறு சந்தேகம் என கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து சர்வதேசத்திற்கு
தமிழரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றோம் என கபட நாடகமாட முயற்சிக்கின்றனர். கபட நாடகமே மீண்டும் அரங்கேற உள்ளது.
இதயத்தில் இனியும் அரசியல் கைதிகள் ஏமாறுவதற்கு ஆயத்தம் இல்லை என்பது அத்தகைய கபட நாடகத்தின் காட்சிகளாகும். கடந்த காலத்தில் தண்டனை காலம் முடிவடைவதற்கு குறுகிய காலமே இருந்த நிலையில் 16 அரசியல் கைதிகளை விடுவித்து நாடகமாடியதை நாமறிவோம்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் யார் விடுதலை செய்யப்பட
உள்ளனர்? எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர்? என்பதை நீதி அமைச்சர்
வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறானவர்களையா தமிழ் அரசியல் தலைமைகள் விடுதலை செய்யக்கோரினர் என அவர்களும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.