100 டொலரை கடந்து செல்லும் மசகு எண்ணெய் விலை! உலக சந்தை ஸ்தம்பிதம்
ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி வீதக் கொள்கை அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில், சர்வதேச நாணயச் சந்தையில் யூரோவின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இல்லாதவாறு உயர்வடைந்து உறுதியான நிலையில் காணப்படுகின்றது.
அதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் பெரல் ஒன்று 100 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளமையால் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பிணைப்பத்திர விளைச்சல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக வளைகுடாப் பகுதிகளூடான எரிபொருள் விநியோகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

வரவிருக்கும் ஐரோப்பிய குளிர்காலத்தை முன்னிட்டு வெப்பமூட்டும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால், பணவீக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி வீதங்களை மேலும் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' இந்த மாத இறுதியில் வட்டி வீதங்களை அதிகரிக்கும் சாத்தியக்கூறு 60 சதவீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம்
ஜப்பானிய யென் நாணயத்தின் மதிப்பும் கடந்த ஜூலை மாத தலையீட்டிற்குப் பின்னர் 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவுசெய்து 7 மாத உயர்வை எட்டியுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாகச் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் பணவீக்கம் மீண்டும் உயர்வடைந்து வருவதால் உலகளாவிய நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது.