விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பயன்பாட்டில் : சர்ச்சையை ஏற்படுத்திய TID விசாரணை
தென்னிலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு வடக்கில் புதைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது என சந்தேகம் நிலவுவதாகவும், அது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.
அண்மையில், வவுனியாவில் மீட்கப்பட்ட 86 கைக்குண்டுகள், 321 T-56 வகை துப்பாக்கி ரவைகள் மற்றும், 5,600 கிராம் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்ட நபர் உட்பட வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள
வவுனியா - நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த காரியப்பெரும ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ மற்றும் முகமது ராசிக் ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேக நபர்கள் வவுனியா பிரதேச புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தென்னிலங்கையில், குற்றச் செயல்கள் மேற்கொள்ள வவுனியா பகுதியிலிருந்து T-56 துப்பாக்கியுடன் வந்த ஒருவர் கடந்த 21 ஆம் திகதி கிரிபத்கொட பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்ட்ட விசாரணைகளின் மூலம் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள் தெற்கில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா?, தெற்கில் உள்ள பாதாள உலக செயல்பாட்டாளர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதாக சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களிடமும் நீண்ட நேரம் விசாரிக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
தெற்கில் உள்ள பாதாள உலக செயல்பாட்டாளர்களுக்கு அத்தகைய ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதா என்பது குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்காக மூன்று சந்தேக நபர்களின் வங்கிப் பதிவுகளைப் பெற உத்தரவு பிறப்பிக்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்த்தில் கோரிக்கை விடுத்தனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கவும், அவர்களின் வங்கிக் கணக்கு பதிவுகளை அழைக்கவும் புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் இது தொடரபான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்த கொள்ளையர்கள்! பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



