எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்கள் (VIDEO)
கொக்குவிலில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று டீசல் விநியோகிக்க மறுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் காணப்பட்ட நிலையில் தமக்கு தேவையான வாகனங்களுக்கு விநியோகம் செய்துவிட்டு டீசல் முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழப்பமடைந்த ஏனைய வாகன சாரதிகள் டீசல் இருக்கின்ற நிலையில் தமக்கு விநியோகம் செய்யுமாறு முறுகல் நிலையேற்பட்டுள்ளது.
குறித்த விடயம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் டீசல் இருப்பதாக தெரிவித்து வாகன சாரதிகளுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சி
வடமராட்சி பிரதேசத்திற்குட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லாத நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்துள்ளது.
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலகம் ஊடாக பதிவு
செய்யப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்குரிய அட்டைக்கு ரூபாய் 2500க்கு பெட்ரோல்
வழங்கப்பட்டதுடன், அவ்வாறு பிரதேசத்திற்கு வெளியே இருந்து செல்கின்ற அல்லது
பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூபாய் 500க்கு மட்டுமே
பெட்ரோல் விநியோகம் இடம் பெற்றது.
மலையகம்
மலையக பகுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களைக் காணக்கூடியதாக உள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'பெட்ரோல் இல்லை' என்ற பாதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலை மட்டுப்படுத்தி விநியோகிக்கின்றனர்.
எரிபொருளுக்காக காத்திருப்பு
இந்த நிலையில் மலையக பிரதேசங்களில் குறிப்பாக அட்டன் மற்றும் கொட்டகலை, நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை போன்ற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது.
ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது.
ஒருபுறம் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காகவும், மறுபுறம் டீசலை பெற்றுக் கொள்வதற்காகவும் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் பிரதான போக்குவரத்தில் வாகன நெரிசல் காணப்படுவதன் காரணமாக நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறித்த நிலையங்களிலிருந்து கையிருப்பில் உள்ள எரிபொருள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.