மாகாண சபைத் தேர்தல் செயற்குழுவிலிருந்து எதிர்க்கட்சிகள் விலகவில்லை.. அரசாங்கம் விளக்கம்
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச் செயற்குழுவிலிருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விலகவில்லை என மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் நாடாளுமன்றச் செயற்குழுவின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் செயற்குழுவிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும், "மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். எவரும் குழுவிலிருந்து விலகவில்லை.
தேர்தல் முறைமை
சகல தரப்பினரது ஒத்துழைப்புடன் குழு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.

குழுவில் சகல விடயங்களும் ஆராயப்படுகின்றன. அவற்றுக்கான யோசனைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் யோசனைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதைப் போன்றே, ஆளும் தரப்பு முன்வைக்கும் யோசனைகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின், சகல தரப்பினரது ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஏன் இந்த விடயத்தில் அவசரப்படுகின்றார்கள் என்பது தெரியவில்லை.
நடைமுறையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்கு உண்மையில் தீர்வு காணும் நோக்கம் இவர்களுக்கு உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்" என்றார்.