அரசாங்கத்தின் அதிரடி நகர்வால் ஆபத்தில் மலையக மக்கள்: ஜீவன் தொண்டமான் கடும் குற்றச்சாட்டு
பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு முன்னர், அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மலையக மக்களின் காணி உரிமைகளையும் எதிர்கால வாழ்வாதாரத்தையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
JEDB, SLSPC மற்றும் எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய அரச நிறுவனங்களின் கீழுள்ள காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டக் காணிகளை தனியார் மயமாக்கல்
குறித்த காணிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் அங்கு வாழும் மக்களுடனும் அவர்களின் பிரதிநிதிகளுடனும் முறையான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றால், அதில் குறைந்தது 10 சதவீதக் காணிகளையாவது அங்கு நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வழங்க முடியும்.
மேலும், பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 7,422 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் தொழிலாளர் உரிமைகள், EPF, ETF உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
கேள்விக்குறியாகும் மலையக மக்களின் வாழ்வாதாரம்
மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான காணிகளை வழங்குவது மாத்திரமன்றி, விவசாயம் மற்றும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் காணிகளை ஒதுக்க வேண்டும்.

அதேவேளை, பெருந்தோட்டங்களின் பங்களாக்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய வளங்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தி தனியார் முதலீட்டுக்கு வழங்க முடியும் என்றால், அங்கு வாழும் மக்களுக்கான காணிகளையும் தனியாக ஒதுக்கீடு செய்ய முடியும் காணிகள் முழுமையாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், எதிர்காலத்தில் அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான வாய்ப்புகள் குறையக்கூடும்.
அதிலும் குறிப்பாக குறிப்பாக, 2042ஆம் ஆண்டில் முடிவடைய வேண்டிய ஒப்பந்தத்தைத் தனியார் தரப்பினருக்குச் சாதகமாக மேலும் நீடிக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சார்ந்த அரசியல் பிரச்சினையல்ல. மலையக மக்களின் அடையாளம், காணி உரிமை மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியமான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.