முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடற்தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வரை கடற்தொழில் நடவடிக்கைக்கு உரிய வகையில் எரிபொருள் கிடைக்காத நிலையும் தொடர்வதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடலினை நம்பி இருக்கும் கடற்தொழிலாளர்களும், சிறுதொழிலாளர்களும் சுருக்குவலை மீன்பிடி நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடல்வளமும் அழிந்துகொண்டு செல்கின்றது.
வாரத்திற்கு ஒரு தடவை 20 லீட்டர் மண்ணெண்ணெய்யை தான் வழங்குகின்றார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு
1 லீட்டர் மண்ணெண்ணெய்யை 340 ரூபாவிற்கு வழங்குகின்றார்கள். ஒரு முறை தொழிலுக்கு போய்வர 20 லீட்டர் மண்ணெண்ணைய் தேவை.
சாதாரணமாக 20 லீட்டர் மண்ணெண்ணெயினை பயன்படுத்தி ஒரு தடவை தொழில் செய்துவர ஒன்பதாயிரம் ரூபா செலவாகின்றது.
இவ்வாறு செலவு செய்து ஜீவனோபாயத்திற்கான வருமானம் கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.
இப்போது சூடை, கும்பிளாமீனுக்குத்தான் போறம். இப்போது வாரத்தில் ஒரு நாளைக்கு போனால் 10 தொடக்கம் 20 கிலோகிராம் வரையில் தான் மீன்தான் கிடைக்கின்றது.
அதிகரித்து வரும் உபகரணங்களின் விலை
வலைகளின் விலை அதிகரிப்பால் வலைகளை எடுத்து தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் கடற்தொழில் உபகரணங்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஒரு படகு இயந்திரம் தற்போது 10 இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது. அதற்கான உதிரிபாகங்களும் வரத்தில்லாததனால் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
இவ்வாறான நிலையில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.