புதிய AI மாதிரிகளால் சைபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: Five Eyes உளவு அமைப்பு எச்சரிக்கை
புதிதாக உருவாக்கப்பட்டு வரும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள், கணினிகளை முடக்கும் சைபர் ஹேக்கிங் தாக்குதல் திறன்களை பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆபத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கை தேவை என்றும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
டிஜிட்டல் தாக்குதலை மாற்றயமைக்க திட்டம்
"ஃபைவ் ஐஸ்" என்று அழைக்கப்படும் இந்த ஐந்து நாடுகளின் உளவு கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய AI மாதிரிகள் தற்போதைய சைபர் பாதுகாப்புத் துறையின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி, டிஜிட்டல் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்களை முற்றிலும் மாற்றியமைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகாது, சில மாதங்களிலேயே இது நிகழக்கூடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'மைதோஸ்' அல்லது Open ai நிறுவனத்தின் 'ஜிபிடி-5.5-சைபர்' போன்ற அதிநவீன ஏஐ மாடல்கள், பயனர்கள் மிகவும் சிக்கலான மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சைபர் தாக்குதல்களை மிக வேகமாகச் செய்ய வழிவகை செய்கின்றன என்ற கவலை அதிகாரிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசின் உத்தரவு
தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, வெளிநாட்டினர் இந்த மாடல்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து, ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது 'மைதோஸ்' ஏஐ-இன் ஒரு பதிப்பை முடக்கியுள்ளது.
AI அச்சுறுத்தல்கள் காரணமாக, அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு முகமையான CISA, அரசு நெட்வொர்க்குகளில் உள்ள கடுமையான டிஜிட்டல் குறைபாடுகளை சரிசெய்வதற்கான காலக்கெடுவை வெறும் மூன்று நாட்களாகக் குறைத்துள்ளது.
இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, மென்பொருட்களை உடனுக்குடன் புதுப்பிப்பதோடு, குறைபாடுகளை விரைவாகக் கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் AI தொழில்நுட்பத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.