சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் மாற்றங்கள் தொடர்பில் வெளியான ஆய்வறிக்கை
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல், சமூக மற்றும் பண்பாட்டு நிலைமைகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று பேர்ன் நகரில் வெளியிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நடுவண் அரசின் குடிவரவு மற்றும் குடியேற்றச் செயலகமான Staatssekretariat für Migration (SEM) சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வறிக்கை, கடந்த 28ஆம் திகதி பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லமான Haus der Religionen – Dialog der Kulturen இல் வெளியிடப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வரலாறு, சமூக ஒருங்கிணைவு, கல்வி, தொழில், மொழி, பண்பாட்டு அடையாளம், சமூகப் பங்கேற்பு மற்றும் தலைமுறைகளுக்கிடையிலான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த ஆய்வில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இவ்வெளியீட்டு நிகழ்வில் நடுவண் அரசின் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வின் வழிகாட்டல் குழுவில் பங்கேற்றவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆய்வின் முடிவுகள், பட்டறிவுகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பார்வைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
புலம்பெயர் வரலாற்றிலிருந்து சமூக வளர்ச்சி வரை
1980களிலிருந்து இலங்கையில் நிலவிய அரசியல் சூழல், இனமோதல்கள், உள்நாட்டுப் போர் மற்றும் பாதுகாப்பற்ற வாழ்வியல் நிலைமைகள் காரணமாகப் பல இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்திற்குப் புலம்பெயர்ந்தனர்.

பாதுகாப்பான வாழ்வு, குடும்பத்தின் எதிர்காலம் மற்றும் புதிய வாழ்க்கையை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புலம்பெயர்வு, இன்று பல தலைமுறைகளைக் கொண்ட சமூக வளர்ச்சியாக மாறியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் வழித்தோன்றல்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர், சமூக அமைப்புகளுடன் எவ்வாறு தொடர்புகளை உருவாக்கினர், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதுடன், அவர்களின் பண்பாட்டு அடையாளம் எவ்வாறு தொடர்ந்து பேணப்படுகிறது என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது.
ஆய்வின் முக்கிய முடிவுகள்
நிகழ்வின் தொடக்கத்தில், குடிவரவு மற்றும் குடியேற்றச் செயலகத்தின் துணை இயக்குநரும் குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைவு பிரிவின் தலைவருமான றெகுலா மாடெர் (Regula Mader) வரவேற்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, நொய்ஷாட்டல் (Neuchâtel) பல்கலைக்கழகத்தின் சுவிட்சர்லாந்து குடியேற்ற மற்றும் மக்கள் தொகை ஆய்வு மன்றத்தைச் (SFM) சேர்ந்த ஆய்வாளர் ஒருவர், ஆய்வின் பின்னணி, ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை விரிவாக முன்வைத்தார்.
குடியேற்றத்தின் ஆரம்பகால சவால்கள், சமூகத்தில் நிலைபெறுதல், கல்வி மற்றும் தொழில் முன்னேற்றம், மொழி, பண்பாட்டு அடையாளம், குடும்ப அமைப்பு மற்றும் தலைமுறைகளுக்கிடையிலான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வின் முக்கிய பகுதிகளாக அமைந்திருந்தன.
ஆய்வாளர்களுக்கு மதிப்பளிப்பு
இந்த ஆய்வில் பணியாற்றியவர்களுக்கும், சுவிட்சர்லாந்தின் நடுவண் அரசின் குடிவரவு மற்றும் குடியேற்றச் செயலகத்தின் அதிகாரிகளுக்கும் சைவநெறிக்கூடத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.

தமிழ்மொழியில் ஆய்வறிக்கையை வெளியிடக் கோரிக்கை
நிகழ்வின் கேள்வி நேரத்தின்போது, இந்த ஆய்வறிக்கையைத் தமிழ்மொழியிலும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த சுவிட்சர்லாந்து அரசின் பிரதிநிதிகள், ஆய்வறிக்கையைத் தமிழ்மொழியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.
பட்டறிவுப் பகிர்வுகளும் திறந்த கலந்துரையாடலும்
ஆய்வின் வழிகாட்டல் குழுவில் பங்கேற்றவர்களின் பட்டறிவுப் பகிர்வுகளும் நிகழ்வின் முக்கிய பகுதியாக இடம்பெற்றன.
இதன்போது சமூகத்தின் வெவ்வேறு பார்வைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் முன்வைக்கப்பட்டதுடன், ஆய்வில் இடம்பெற்ற விடயங்கள் நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், ஆய்வின் முடிவுகள், சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் தொடர்பில் பங்கேற்பாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

றெகுலா மாடெர், நிறைவுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது. பின்னர் பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர்.
தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவம்
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூக வளர்ச்சியில் தமிழ்மொழி, பண்பாடு, மதம், குடும்ப உறவுகள் மற்றும் சமூக அமைப்புகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
தமிழ்ப் பாடசாலைகள், கோவில்கள், மன்றங்கள், இளையோர் அமைப்புகள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் மொழி மற்றும் பண்பாட்டைப் பேணுவதிலும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
தமிழ்மொழிக் கல்வி, இலக்கியம், இசை, நடனம், சமய வழிபாடுகள், பாரம்பரிய விழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் மூலம் தமிழர் பண்பாட்டு அடையாளம் தொடர்ந்து வளர்க்கப்படுகிறது.
அதேவேளை, சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த அல்லது சிறுவயதில் அங்கு வந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர், தமது கல்வி, தொழில், சமூக உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் ஊடாகப் புதிய அடையாளங்களை உருவாக்கி வருகின்றனர்.
தமிழர் பண்பாட்டுடன் இணைந்திருப்பதையும், சுவிஸ் சமூகத்தில் முழுமையாகப் பங்கேற்பதையும் பலர் ஒருங்கிணைந்த வாழ்க்கை அனுபவமாகக் கொண்டுள்ளனர்.
தலைமுறை மாற்றங்களும் எதிர்காலப் பார்வையும்
முதல் தலைமுறையினர் எதிர்கொண்ட மொழிச் சவால்கள், தொழில் வாய்ப்புகள், குடியேற்ற நடைமுறைகள் மற்றும் புதிய சமூகத்தில் நிலைபெறுவதற்கான முயற்சிகள், அடுத்த தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து வேறுபடுகின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் கல்வி, தொழில், அரசியல், பண்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர்.

இருப்பினும், சமூக அங்கீகாரம், சமத்துவம், பாகுபாடு, தலைமுறைகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தைத் தொடர்ந்து பேணுதல் போன்ற விடயங்கள் முக்கியமான விவாதங்களாக உள்ளன. ஒரு புலம்பெயர் சமூகத்தை வெறுமனே குடியேற்றப் பின்னணியின் அடிப்படையில் அணுகாமல், அதன் பல்வேறு அனுபவங்கள், சமூக வளர்ச்சி, அடையாளம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளின் ஊடாகப் புரிந்துகொள்ளும் முயற்சியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
சமூக வரலாற்றைப் பதிவு செய்யும் முக்கிய ஆவணம்
சுவிட்சர்லாந்தில் இலங்கை வம்சாவளியினரின் வாழ்வியல் இன்று பல தலைமுறைகளின் அனுபவங்களை உள்ளடக்கிய சமூக வரலாறாக வளர்ந்துள்ளது. புலம்பெயர்வின் ஆரம்பகாலச் சவால்களிலிருந்து கல்வி, தொழில், குடும்பம், பண்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பு வரை இந்தச் சமூகத்தின் பயணம் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் குடிவரவு மற்றும் குடியேற்றச் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூக மாற்றங்களை ஆவணப்படுத்துவதுடன், தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து சிந்திக்கவும் உரையாடல்களை உருவாக்கவும் முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஒரு புலம்பெயர் சமூகத்தின் வரலாறு என்பது அதன் கடந்தகாலத்தை மட்டுமன்றி, அது வாழும் தற்போதைய சமூகத்தையும், அடுத்த தலைமுறைகள் உருவாக்கவிருக்கும் எதிர்காலத்தையும் உள்ளடக்கியதாகும்.
அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர்களின் வழித்தோன்றல்களின் வாழ்வியல் தொடர்பான இந்த ஆய்வு, சமூகத்தினர், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் முக்கிய ஆவணமாக அமைகின்றது.
நிகழ்வின் நிறைவில், வணக்கம் உணவகத்தால் ஈழத்தமிழர் பண்பாட்டு சிற்றுண்டி விருந்து வழங்கப்பட்டது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri