தமிழரசின் தலைமையை சிறீதரன் உடன் ஏற்க வேண்டும்: மாவை சிறப்பு கடிதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன்.
தேசிய மாநாடு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள்.
தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை.
அதனால் நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்துள்ளேன். அந்தப் பொறுப்பை உடன் ஏற்றுத் தலைவராகச் செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
2024 ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இந்தக் கடிதம் மூலம் அறியத் தருகின்றேன்.
எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றுள்ளது.
இந்நிலையில், குறித்த கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |