காணி ஆவணங்களுக்கான கட்டணம் அறவிடுவது குறித்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
காணி ஆவணம் வழங்குவதற்கு 40 வருடங்களாக குடியிருப்பவர்களிடம் தற்போதைய பெறுமதியில் கட்டணம் அறவிடுவது முறையல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் (M.Chandrakumar) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
“அரசினால் காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளில் நீண்ட காலமாகக் குடியிருந்து வருவோருக்கான காணி அனுமதிப் பத்திரம், அளிப்புப் பத்திரம் போன்ற ஆவணங்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவிற்கு அமைய முழு உரித்துள்ள உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படுகிறது.
உரித்துப் பத்திரங்கள்
இந்நிலையில், நாடு சுதந்திரமடைந்த பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற சிறந்த நடவடிக்கை இதுவாகும். நாட்டில் முன்னெடுத்துவரும் பொருளாதார முன்னேற்றத்துக்கு காணி உரிமையை மக்களுக்கு வழங்குவது இன்றியமையாததாகும்.
இந்தச் சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராட்டுக்குரியவராகிறார்.
இத்தகைய காணி உரித்துப் பத்திரங்கள் மக்களுக்குக் கிடைக்கும்போதும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஒரு தொகுதியினருக்கு இந்த உரித்துப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலை காரணமாக அரச காணிகளில் குடியிருந்தும் ஆவணம் பெற்றுக் கொள்ள முடியாமற்போனவர்கள், ஏற்கனவே ஆவணத்தைப் பெற்றிருந்தும் இடப்பெயர்வுகளினால் ஆவணத்தைத் தவற விட்டோர், தற்போது ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் காணிகளில் குடியிருப்போர் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சித் தகுதியைப் பெற்று, அவற்றைப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் அபிவிருத்தி செய்துள்ளனர்.
மக்களுக்கு நெருக்கடி
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் (மீள்குடியேற்றத்தின் பின்னர்) மேற்படி காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தைக் கோரியபோது, இவர்களுடைய காணிகளுக்குத் தற்போதைய தகுதி மட்டம் (வருமானம்) கவனத்திற் கொள்ளப்பட்டு, தற்போதைய கொள்வனவு மதிப்பீட்டுப் பெறுமதியைச் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் பிரதேசங்களில் (இந்தக் காணிகளில்) வாழும்போது போரினால் ஏற்பட்ட இழப்புகள், சேதங்களுக்கான இழப்பீடுகள் கூட இன்னும் முழுமையாக வழங்கப்படாத சூழலில், காணிக்கான இன்றைய பெறுமதியைச் செலுத்துமாறு கோருவது குறித்த மக்களுக்கு நெருக்கடியையே உண்டாக்குகிறது
எனவே, இத்தகைய பின்னணியைக் கொண்ட மக்களுக்கு, அவர்கள் பின்னாட்களில் வருமானம் கூடிய வகுப்பினர்களின் பிரிவில் உள்ளடக்கப்பட்டாலும் அவர்களது நீண்டகாலக் குடியிருப்பினை உறுதிப்படுத்துவதற்கு மாற்று ஆவணங்களைக் கோர வேண்டும். அத்துடன், மரபு வழியாகக் காணியில் உரித்தினை வெளிப்படுத்துவோருக்கு உரிய தீர்வினைக் கண்டு, பூரண உரித்துள்ள உரிமைப் பத்திரத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எனவே எல்லோருக்கும் சம நிலையில் கொள்வனவு விலை விலக்களிக்கப்பட்டு நீதியான முறையில் உரித்துப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |