இந்திய வாக்காளர்கள் இலங்கைக்கு கற்று தந்த பாடங்கள்
இந்தியாவின் (India)642 மில்லியன் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு அரசாங்கத்தை அமைதியான முறையில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு தோல்வியைப் போன்ற வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
அத்துடன் எதிர்கட்சிக் கூட்டணி தோல்வியை ஒரு வெற்றியாக உணரச்செய்துள்ளனர் என்று இந்தியாவின் இளம் செய்தியாளர் கூறியிருப்பதை இலங்கையின் ஊடகம் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்துத்துவ மேலாதிக்கம்
பாரதிய ஜனதாவின் பிரசாரம் முழுவதும் தங்கள் தலைவரின் தனிப்பட்ட கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.
எனினும் தென்னிந்திய வாக்காளர்கள், இந்துத்துவ சித்தாந்தத்தை முழுமையாக ஏற்கவில்லை என்றால் வடக்கின் இந்து மையப்பகுதி கூட இந்த முறை அதற்கு அடிபணியவில்லை என்று குறி;த்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவின் கோட்டையாக இருந்த உத்தரபிரதேச மாநிலம் 80இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தது. இந்நிலையி்ல், அந்த மாநிலமும் இந்த முறை ஆளுங்கட்சிக்கு முதுகில் குத்தியுள்ளது
நீண்ட காலமாக நிலவி வரும் விவசாயிகளின் நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெல்லும் நடவடிக்கைகள், புதிய இராணுவ ஆட்சேர்ப்பு திட்டம் போன்றவை அனைத்தும் வடக்கில் மோடியின் இந்துத்துவ மேலாதிக்கத்தை முறியடித்துவிட்டதாக கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கட்சிகளின் ஏகபோகம்
அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான இந்துக் கோவிலான ராமர் கோயில் கூட மோடிக்கு தேர்தல் வெகுமதியை வழங்கவில்லை.
மோடி மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் பிராந்தியக் கட்சிகளின் ஏகபோகத்தை உடைக்க அயராது பிரசாரம் செய்தார்.
எனினும் இரண்டு மாநிலங்களிலும் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில், கச்சத்தீவு பிரச்சினையை வெளியே இழுக்க, நட்பு அண்டை நாடான இலங்கையுடனான இருதரப்பு நல்லுறவை கூட அவர் புறக்கணித்தார்.
அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மோடி நிர்வாகம் மில்லியன் கணக்கான இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டதுடன், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை.
இந்தநிலையில் இந்தியாவின் மாபெரும் தேர்தலிலிருந்து இலங்கை என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதை கொழும்பின் ஊடகம் ஆராய்ந்துள்ளது.
வர்த்தக உறவுகள்
இதன்படி, கருத்துக் கணிப்புகளில் சமூகத்தின் அடிநீரோட்டங்கள் கண்காணிக்கப்படவில்லை என்பதை அந்த ஊடகம் இலங்கைக்கான பாடமாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கை அரசாங்கம் புதுடில்லியில் இருந்து தனித்து செயற்படும் இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், மகாராஸ்டிரா போன்றவற்றை அங்கீகரித்து, அவற்றுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும்,
அத்துடன் பாரதிய ஜனதாவின் ஆட்சியமைந்துள்ள ,ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களுடன் வர்த்தகம், கலாசாரம், மதம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றிற்காக பொருளாதாரப் பாலங்களை உருவாக்க வேண்டும் என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த மாநிலங்களுடனான உறவுகள் பருப்பு, வெங்காயம், சர்க்கரை மற்றும் முட்டை ஆகியவற்றின் இறக்குமதி வர்த்தகத்துடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும் அந்த ஊடகம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |