கட்சித்தாவலை பின்னோக்கி நகர்த்தும் ஐக்கிய மக்கள் சக்தியினர்
ஐக்கிய மக்கள் சக்தியில் (SJP) இருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு (UNP) தாவத் தயாராக இருந்தவர்கள் தற்போது பின்னோக்கி நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், சஜித் அணியில் இருந்து சிலரை தம்வசப்படுத்தும் ரணிலின் திட்டம் வழக்கம் போல முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கட்சித்தாவல் பட்டியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும, ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
மக்களின் முன்னேற்றம்
ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியிருக்கலாம் என்றும் ஆனால் அவரின் அரசாங்கத்தரப்பின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு திறமையான குழு இல்லை என்பதோடு அரசாங்கம் அவருக்கு சாதகமாக செயற்படுவதாகவும், மக்களின் முன்னேற்றத்திற்காக அது செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி முகாமில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை கருத்தில் கொண்டு சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கட்சி தாவல் நடவடிக்கையை தாமதித்துள்ளனர்.
சாதகமான பதில்
இதனால் கட்சி தாவல் விவகாரத்தில் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) அரசாங்கத்துக்கு செல்லக்கூடிய முக்கியமானவராக உள்ளார்.
எவ்வாறாயினும், அவரது கோரிக்கைகளுக்கு ரணிலின் கட்சி இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை.
ராஜித சேனாரத்ன பொதுத்தேர்தலில் தனது மகனுக்கு தேசிய பட்டியலில் இடம் மற்றும் தமக்கான பொறுப்புக்களை அவர் கோரியிருந்த நிலையில் ரணில் அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
எனினும், சேனாரத்ன கடந்த வாரம் ஏக்கலையில் இடம்பெற்ற தொழிற்சாலை திறப்பு விழாவில் விக்ரமசிங்கவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |