வியட்நாம் தலைவரைப் போல் மகிந்தவும் போற்றப்பட வேண்டும் - இப்படிக் கூறும் மொட்டுக் கட்சி உறுப்பினர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வயோதிப நிலையையடைந்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால் அவர் இந்த நாட்டிற்காகச் செய்த சேவைகள் என்றும் வயோதிபமடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மகிந்த ராஜபக்சவின் அரசியல் பங்களிப்புகள் குறித்து இவ்வாறான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
மகிந்த ராஜபக்சவின் தியாகங்கள்
மேலும் கூறுகையில், "முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த தாய்நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உண்மையை எமது நாட்டின் மக்கள் விரைவில் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

வியட்நாம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த புரட்சித் தலைவரை அந்த நாட்டு மக்கள் இன்றளவிலும் மிகவும் உயர்வாக மதித்துப் போற்றுகின்றனர்.
அவரது உடலம் இன்றும் பாதுகாக்கப்பட்டு உரிய மரியாதைகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இலங்கையில் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த சில இளைஞர்கள் மகிந்த ராஜபக்சவின் தியாகங்களைப் புரிந்துகொள்ளாமல், அவரை 'கிழட்டு மைனா' என விமர்சித்துப் பேசி வந்தனர்.
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை அவ்வாறு தவறாக விமர்சித்தவர்கள், தங்களது நிலைப்பாட்டில் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டோம் என்பதை இன்று படிப்படியாக உணரத் தொடங்கியுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கண்ட பின்னர், தாங்கள் செய்த தவறை உணர்ந்து எம்மிடம் நேரடியாகவே வந்து பேசி வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.