சட்டத்தரணி தம்பதி படுகொலை: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா..! சஜித் சாடல்
கொழும்பு, பத்தரமுல்ல - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று(17.02.2026) நாடாளுமன்றம் கூடிய நிலையில், நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாஸவின் கேள்வி
முப்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில், பகல் வேளையில் இவ்வாறானதொரு படுகொலை இடம்பெற்றமை மிகவும் பாரதூரமானது எனச் சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான குற்றங்களைத் தடுக்க அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால,
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பகுதி சட்ட ரீதியாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமையவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெறும் தனிப்பட்ட சம்பவங்களை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சபையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை குறித்த தகவல்
சட்டத்தரணி தம்பதியினரின் படுகொலை தொடர்பில் 12 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏற்கனவே சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் மேலதிக விவரங்களை தற்போது வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, அமைச்சர் கூறிய "பாதுகாப்பு வலயம் அல்ல" என்ற கருத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் வாதிட்டுள்ளார்.
இராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதி என்பதால் அது பாதுகாக்கப்பட்ட வலயமே என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், குறிப்பிட்ட அந்த இடம் சட்டரீதியாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்காது என அமைச்சர் மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan