நாடளாவிய ரீதியில் தொடர் கனமழை: 24 மணி நேர மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, எலபாத, குருவிட்ட, கஹவத்தை மற்றும் நிவிதிகலை ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனதீர இது குறித்துத் தெரிவிக்கையில்,
மலைப்பாங்கான பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஏற்கனவே மண்சரிவு அறிகுறிகள் தென்பட்ட இடங்கள் மீண்டும் சரிவடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள், மின்கம்பங்கள் அல்லது மதில்கள் சாய்வடைதல், தரை மட்டத்திலிருந்து திடீரென நீர் ஊற்றுகள் தோன்றுதல் அல்லது கிணற்று நீர் நிறம் மாறுதல் ஆகிய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மக்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
அபாய வலயங்களில் வசிப்பவர்கள் மற்றும் சரிவான பாதைகளில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.