கிண்ணியா பாடசாலை மண்டப இடிப்பு : தவறு உறுதியானால் சட்ட நடவடிக்கை! பிரதமர்
திருகோணமலை கிண்ணியா அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த எம்.ஈ.எச். மரூப் கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நவம்பர் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
1994ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த கேட்போர் கூடம் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்திருந்ததாகவும், அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி இடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபரின் கோரிக்கையைத் தொடர்ந்து, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாவட்டப் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாணப் பொறியியலாளர் மற்றும் கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் உள்ளிட்டோரின் பரிந்துரைகளும் இதற்குக் கிடைத்திருந்ததாக பிரதமர் தெரிவித்தார்.
இடிக்கப்பட்ட கேட்போர் கூடத்திற்குப் பதிலாக தற்போது வகுப்பறைக் கட்டடம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
இந்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கையையும் ஆராய முடியும் எனத் தெரிவித்த அவர், முறைகேடுகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.