நாமல் வழக்கில் புலனாய்வாளர்கள் கண்டறியாத ஆதாரங்கள்! சிக்கலில் ஜனாதிபதி
எதிர்கால அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படக்கூடிய ஒரு சூழல் ஏற்படக்கூடும் என்று பிவிதுரு ஹெல உறுமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர்,
எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த செயல்முறையின் மூலம் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூட எதிர்காலத்தில் கடுமையான சட்ட அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எயார்பஸ் கையூட்டு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைத்திருப்பது அரசியல் பழிவாங்கல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இது ஊழல்வாதிகளைத் தண்டிக்கும் செயல்முறை அல்ல, மாறாக மனிதாபிமானமற்ற அரசியல் பழிவாங்கல் என்பதை அரசாங்கம் உலகிற்கு நிரூபித்துள்ளது என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்ற நிமல் பெரேராவிடம், தற்போதைய அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் சென்று வாக்குமூலம் பதிவு செய்த போது அதில், நாமல் ராஜபக்சவின் சார்பாக பணத்தைப் பெற்றதாகவும், அதற்கு பதிலாக மூன்று முறை அவருக்கு நூறு மில்லியன் ரூபாயைக் கொடுத்ததாகவும் நிமல் பெரேரா கூறியதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புலனாய்வாளர்கள் கண்டறியாத ஆதாரங்கள்
இருப்பினும், வாய்மொழி வாக்குமூலத்தை தவிர, தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், தொலைபேசி பதிவுகள் அல்லது சிசிடிவி காட்சிகள் போன்ற வேறு எந்த சுயாதீனமான ஆதாரங்களையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எயார்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கூறப்படும் வர்த்தகர் நிமல் பெரேரா அல்லது இலஞ்சம் வழங்கிய எயார்பஸ் நிறுவனத்திற்கு எதிராக இதுவரை ஏன் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எயார்பஸ் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதன் முன்னேற்றத்தை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.