கிளிநொச்சி - புழுதியாறு ஏற்று நீர்பாசனத்திட்டம்: பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
கிளிநொச்சி - புழுதியாறு ஏற்று நீர்பாசன திட்டத்தின் சூரிய மின்கல தொழில்நுட்ப அபிவிருத்திகள் வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி - இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள புழுதியாறு ஏற்று நீர் பாசன திட்டமானது வடக்கு மாகாண சபையின் மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் சுமார் 32 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி அப்போதைய முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனினால் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
ஏற்று நீர்ப்பாசனத் திட்டம்
இவ்வாறு கையளிக்கப்பட்ட குறித்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டமானது பொருத்தமான நீர் பம்பி பொருத்தப்படாமை மற்றும் மின்னிணைப்பு வழங்கப்படாமை, அதிக எரிபொருள் தேவை என்பன காரணமாக மூன்று மாத காலத்திலேயே செயலிழந்துள்ளது.
இன்று வரை செயலிழந்த நிலையில் காணப்படும் இந்நீர்ப்பாசன திட்டத்தின் கட்டுமானப் பணிகள் சேதமடைந்தும் நீர் பம்பியினுடைய உதிரி பாகங்கள் களவாடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது சூரிய மின் சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் இதனை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் கோரிக்கை
அதாவது குறிப்பிட்ட சிலர் தங்களுடைய சுய நோக்கங்களுக்காக புலம்பெயர் அமைப்பு ஒன்றை தொடர்பு கொண்டு சூரியமின் திட்டத்தை பொருத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையிலே குறித்த ஏற்று நீர் பாசன திட்டம் செயலிழந்துள்ளமை தொடர்பில் சரியான ஆய்வுகள் எதும் மேற்கொள்ளப்பட்டவில்லையெனவும் குறித்த ஏற்று நீர்பாசன திட்டமானது மக்கள் பயன்படக்கூடிய வகையிலே நேரடியாக வடக்கு மாகாண சபையினாலோ அல்லது அவர்களது கண்காணிப்பிலோ முன்னெடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


