நிதி இன்மையால் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படாத கிளிநொச்சி வீரர்கள்
கடற்கரை கைப்பந்து (Beach volleyball) தேசிய போட்டிக்கு கிளிநொச்சி வீரர்கள் இருவர் அழைத்துச் செல்லப்படாமை சமூகத்தில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சி(Kilinochchi) - மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் கரைச்சி பிரதேச செயலக பிரிவு, கிளிநொச்சி மாவட்டம், வடக்கு மாகாண மட்டங்களில் மேற்படி போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.
கடற்கரை கைப்பந்து தேசிய போட்டி
இவர்களுக்கான தேசிய போட்டி நீர்கொழும்பில்(Negombo) நேற்று முன்தினம்(31) ஆரம்பித்து சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் இடம்பெறுகிறது.
இந்தப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து முதன் முதலாக மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற வேண்டியிருந்த நிலையில் அவர்கள் உரிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படவில்லை.
எனவே, தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படாமைக்கான காரணம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிலரிடம் வினவிய போது,
”நீர்கொழும்பில் மூன்று நாட்கள் தங்கயிருக்க வேண்டும். ஒரு நாள் தங்குமிட செலவு 8,500 ரூபா தேவைப்படுகிறது. எனினும், குறித்த நிதி வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை.
இதன் காரணமாகவே தேசிய போட்டிக்கு வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வீரர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை.“ எனத் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தேசிய போட்டிக்குச் செல்வது என்பதே சாதனைக்குரிய விடயம் என்ற நிலையில், வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்கரை கைப்பந்து போட்டிக்கு வீரர்களை அழைத்துச் செல்லப்படாமையானது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |