அயோத்தியின் இராமர் கோவில் மீது தாக்குதல்: எச்சரிக்கும் குர்பத்வந்த் சிங்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இராமர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தானிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பால் வெளியிடப்பட்ட காணொளி அறிக்கையில், 2024 நவம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என பன்னூன் எச்சரித்துள்ளார்.
இந்த காணொளி கனடாவின் பிராம்ப்டனில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காணொளியில், வன்முறை நிறைந்த இந்துத்துவா சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியின் அடித்தளத்தை நாங்கள் அசைப்போம் என்று பன்னூன் குறிப்பிட்டுள்ளார்.
எயார் இந்தியா
கடந்த ஜனவரி மாதம் இராமர் கோவிலின் திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி அங்கு பிரார்த்தனை செய்யும் படங்களும் பன்னூனின் காணொளியில் காட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்து கோவில்கள் மீதான காலிஸ்தானிய தாக்குதல்களில் இருந்து விலகி இருக்குமாறு கனடாவில் உள்ள இந்தியர்களையும் பன்னுன் எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம், நவம்பர் 19ஆம் திகதி அன்று எயார் இந்தியா விமானத்தில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பன்னூன் எச்சரித்திருந்தார். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்ட நேரத்தில் அவரின் அச்சுறுத்தல் காணொளியும் வெளியாகியிருந்தது.
அந்த காணொளியில், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நவம்பர் 19ஆம் திகதிக்கு பின்னர், “எயார் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் பன்னூன் எச்சரித்திருந்தார்.