நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற இலங்கையின் பொதுத் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழர் தேசத்தின் அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் மேம்பாட்டுக்கு எத்தகைய செயற்திட்டத்தின் அடிப்படையில் இயங்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம்
அதேவேளை, "தேசிய மக்கள் சக்தி தற்காலத்தில் முன்வைக்கும் தனிநபர் சமத்துவம், இலங்கையர்கள் என்ற கோட்பாடுகள் என்பன, கோட்டாபய முன்வைத்த கோட்பாடுகள்.
ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட 15 ஆண்டுகளின் பின்னரும் சிங்கள பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை தொடர்ச்சியாக பேணி வருவதானது, தமிழ் மீதான அடக்குமுறைக்கு சான்றாக அமைகின்றது.
எனவே, சிங்கள தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்காது நிராகரிப்பது தமிழர் நலன் நோக்குநிலில் இருந்து அவசியமானது.
சிங்களத் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் அரசியல் ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பை மறுதலிப்பதுடன், இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தலைமையேற்றுச் செய்யும் கட்சிகளாக இவை இருக்கின்றன, இருக்கப் போகின்றன.
இத்தகைய சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பின், அது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானதாகும்” என குறித்த அறிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.