உலக மீன்வள அமர்வில் இலங்கை முன்வைத்த முக்கிய முன்மொழிவுகள்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்று வரும் மீன்வளக் குழுவின் 37ஆவது அமர்வில் (COFI37), இலங்கை தனது தேசிய மீன்வளக் கொள்கை முன்னுரிமைகள், கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவம், சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த முக்கிய சர்வதேச அமர்வில், உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பின் நிலைமை தொடர்பான SOFIA 2026 அறிக்கை, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடியை கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், சிறிய அளவிலான மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு ஆதரவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்
இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச கலந்துகொண்டு, இலங்கையின் மீன்வளத்துறையின் தற்போதைய நிலை, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடுகளையும் முக்கிய கருத்துக்களையும் முன்வைத்தார்.

அத்துடன், வங்காள விரிகுடா அரசுகளுக்கிடையேயான அமைப்பான BOBP-IGO-வின் தலைமைப் பொறுப்பிலும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
வளரும் நாடுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை நவீனமயப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் முக்கிய பங்காற்றுவதாக செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச சுட்டிக்காட்டினார்.
மீன்வளத் தரவுகளை அறிவியல் ரீதியாகச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் அவற்றின் அடிப்படையில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
சுமார் 800 முன்னணி பிரதிநிதிகள் பங்கேற்றனர்
இதனிடையே, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என இலங்கை வலியுறுத்தியது.

துறைமுக நாடுகளின் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தமான Port State Measures Agreement (PSMA)-இல் இலங்கை இணைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், IUU மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கான நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச தெரிவித்தார்.
உலகளாவிய மீன்வளத் துறையின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் அறிவியல் அடிப்படையிலான தரவு, நவீன தொழில்நுட்பம், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த அணுகுமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச COFI37 அமர்வில் வலியுறுத்தினார்.
இந்த அமர்வில் உலகின் 130 நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 800 முன்னணி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25