கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (05.06.2026) 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவனயீர்ப்புப் போராட்டம்
இந்த நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று(05) கேப்பாபுலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொதுமண்டபம் ஆகியவற்றையும் இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற வழிவகுக்குமாறு அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலந்து கொண்டோர்
பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தங்களது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தங்களது காணிகளும் பொதுச் சொத்துகளும் முழுமையாக மீள வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் வி.மணிவண்ணன், மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் (அரகல) ராஜ்குமார் ரஜீவ்காந், அரசியல் செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதி நே.சங்கீதன், முன்னாள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கேப்பாபுலவு மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam