மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்
இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை 2.88 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு 'நேஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்' (NSO) தனியார் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
எனினும், மின்சாரக் கட்டணங்களை குறைந்தபட்சம் 10 சதவீதமாவது குறைக்க முடியும் என மின் பாவனையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்வு
நாட்டில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக நீர் நிலைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதோடு, நீர்மின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளமையே இதற்குக் காரணம் என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக மின் பாவனையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக கருத்து வெளியிட்டுள்ளார். நான்காம் காலாண்டிற்கான கட்டணத்தை 2.88% உயர்த்த NSO நிறுவனம் கோரியுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கண்ட முதற்கட்ட ஆய்வின்படி, இந்த அதிகரிப்பை 1.46% ஆகக் குறைக்க முடியும் எனத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் குறைந்தது 10 சதவீதமாவது குறைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் பலத்த மழை
தற்போது நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால், பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் செலவு கூடிய மூலங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, நீர்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்சார நிறுவனங்களால் முடியும் என தெரிவித்துள்ளார்.
கட்டணத் திருத்தத்தின் போது இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
என்.எஸ்.ஓ சமர்ப்பித்துள்ள முன்மொழிவு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.