மோசமடையும் காலநிலையினால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெய்துவரும் மழையால் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.

சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 206 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 10,311 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் 3 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நீர்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படவுள்ளது.

எனவே ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நில மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவசர அனர்த்த சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.