கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 36ஆவது நாளாக தொடரும் போராட்டம்
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று (29.07.2026) அந்தப் போராட்டம் இரண்டாவது கட்டத்தின் 36ஆவது நாளை எட்டியுள்ளது.
36ஆவது நாளாக தொடரும் போராட்டம்
கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இந்த நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகளிடமிருந்து எந்தவித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணிவிடுவிப்பு
இதன்போது போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ”இன்று இரண்டாம் கட்டத்தின் 36 வது நாளாக போராடிக்கொண்டு இருக்கின்றோம்.

எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் இவ்விடத்திற்கு வருகை தருவதாக உறுதியளித்திருக்கின்றார். அவரின் வருகைக்காக நாம் காத்திருக்கின்றோம்.
அவர் எமது காணிவிடுவிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனவே எமது சாத்வீகமான போராட்டத்திற்கு செவிசாய்த்தமைக்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.