கீரிமலை ஜனாதிபதி மாளிகை விவகாரம் : யாழ். பல்கலைக்கு வழங்க சந்தேகம் வெளியிட்டுள்ள ஆளும் தரப்பு
கீரிமலை ஜனாதிபதி மாளிகையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த நிலையில் அதனை பல்கலைக்கழகத்தால் பராமரிக்க முடியுமா என்ற பிரச்சினை உள்ளது என தேசிய மக்கள் சக்தியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவுகளை கோரிய நிலையில், யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்திற்கான திட்ட முன்மொழிவு, இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கும், சுற்றுலா மையம் அமைப்பதற்குமென மொத்தமாக 4 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன என நேற்று(30) நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வெளிப்படையான கோரல் மூலம்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மாளிகையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதே சிறந்து.
இதனை விடுத்து தனியாருக்கு வழங்குவது என்றால் இதனை ஆராயவேண்டும்.
மேலும் இந்தக் கட்டடம் தனியாருக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளது. எனவே காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடாமல் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இதனை வழங்குவதே சிறந்தது.
தனியார் பயன்படுத்துவது எனில் முறையாக வெளிப்படையான கோரல் மூலமே வழங்கப்பட வேண்டும்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிடல்கள் இன்றி வெறுமனே காணிகளை கைப்பற்றுவதையே நோக்காகச் செயற்படுகின்றது, இதனை மத்திய அரசாங்கத்திடம் கொடுக்காமல் எங்களுக்குரிய வளமாக பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானத்திற்கு செலவிடும் தொகை
இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில், இந்தக் கட்டடத்தை யாழ் பல்கலைக்கழகத்தால் பராமரிக்க முடியுமா என்ற பிரச்சினை உள்ளது.
கட்டடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. அதனை அரசாங்கத்தால் புனரமைக்க முடியாது. தற்போது கட்டுமானத்திற்கு செலவிடும் தொகையைவிட புனரமைக்கும் செலவு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில், இந்தக் கட்டடம் கடற்கரைக்கு அருகில் இருப்பதால் அதனை பல்கலைக்கழகம் தொடர்ந்தும் புனரமைப்பது கடினம் என்றார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜாவும் இந்தக் கட்டடம் முழுவதுமாகப் பாழடைந்துவிட்டது என்றார்.
தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சியா..
யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மாளிகையானது சுமார் 29 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது.
17 காணி உரிமையாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர் காணிகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகம் இந்து கற்கைகள் பீடத்திற்கான முன்மொழிவை மாத்திரமே தந்துள்ளது.
குறித்த இடமானது இந்து கற்கைகள் பீடத்திற்கு மேலதிகமான இடத்தினையும் கொண்டுள்ளது. எனவே வேறு பீடங்களையும் இதில் அமைக்க விரும்புகிறீர்களா என பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முன்மொழிவைப் பெற்றுவிட்டு தீர்மானிப்போம் என்றார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஜனாதிபதி மாளிகையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பராமரிக்க முடியாது எனக் கூறுவது அதனை தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சியா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
