கௌரிசங்கரியின் இழப்பு அதிர்ச்சியளிக்கின்றது - காணாமல் போனவர்களின் உறவுகள்
சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவித்த போது,
"பயங்கரவாத சட்டம்" என்ற பெயரில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு, நிர்க்கதியான காலத்தில் இந்த வழக்கறிஞர் அம்மா பேருதவி நல்கினார். அவரது இழப்பு அனைத்து தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
அவரின் செயல் புதியதலைமுறை தமிழ்த் தேசிய தலைவர்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டி. கொழும்பில் சவால் மிக்க பல வழக்குகளில் சாதித்த சிறந்த ஆளுமையைத் தமிழ் இனம் இழந்துள்ளது.
அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்தவர்.
பிரதானமாகக் குடிமக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு விடயங்களில் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். மனித கடத்தல்கள், திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலைகள் போன்ற வழக்குகளுக்காக உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகள் குழுவோடு நின்று போராடியவர்.
மேலும் குடியியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகி நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஒருபோதும் பின்னின்றதில்லை. அவரது கடின உழைப்பு அனைத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது சட்ட நடவடிக்கைகளில் இலங்கைக்குள் நீதியையும் பொறுப்பு கூறலையும் பெறவில்லை.
எனவே நாங்கள் இன்னும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமிழர் விவகாரங்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு நீதி, பொறுப்பு கூறல் மற்றும் நிரந்தரமான பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தமிழர் தாயகத்தைக் கொண்டுவரும். இவரின் திடீர் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.




