விஜய்க்கு ஆதரவாக பாஜக! குற்றஞ்சாட்டும் சீமான்..
கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஊடகவியலாளர்களிடம் அவர் நேற்றையதினம்(2) கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு ஆதரவு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும். அனைத்துக்குமே காரணம் அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது. பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
பாஜக எம்.பி.க்கள் குழு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதைவிட, திமுக அரசை குறை கூறுவதில்தான் மும்முரமாக உள்ளனர்.
கரூர் சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவோர், மணிப்பூர் கலவரத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என கூறவில்லை.
தமிழக அரசு
இதே நீதிபதி ஆணையத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 3 மணி நேரம் சாட்சியம் அளித்தேன்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்பள உயர்வுடன் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு உண்மை கண்டறியும் குழு அமைக்காத பாஜக, தற்போது கரூர் சம்பவத்துக்கு மட்டும் அமைப்பது அரசியல்.
கள்ளச் சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்கள், நடிகரைப் பார்க்க வந்து இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசு, கடற்றொழிவாளர், இராணுவ வீரர் இறந்தால் எத்தனை லட்சம் கொடுக்கிறது? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.



