களுத்துறை துப்பாக்கிச் சூடு: முக்கிய சந்தேக நபருடன் மற்றொருவருவரும் கைது..!
களுத்துறை - வெட்டுமகடை பகுதியில் கடந்த மே 28ஆம் தேதி தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரும், மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.
படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில், மற்றைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
படுகொலை வழக்கில் சிக்கிய முக்கிய நபர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
களுத்துறை நகரில் உள்ள கிளப் மாவத்த விளையாட்டு மைதானம் அருகே இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், முக்கிய சந்தேக நபரிடமிருந்து 22,630 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறை தெற்கு, மரிக்கார் வீதியில் வசித்து வந்த 43 வயதான தொழிலதிபர் பக்கீர் முகமது முகமது சாபிக், கடந்த மே 28ம் திகதி பொலிஸாருக்கு தகவல் வழங்குனராக செயற்பட்டதான சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக ஆயுததாரிகள் வந்ததாகக் கூறப்படும் கார், தெபுவன பொலிஸ் பிரிவில் உள்ள தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள குறுகலான வீதியொன்றில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு வேன், அதே நாளில் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த படுகொலைச் சம்பவத்தை போம்புவல நவீன் என்ற பாதாள உலகக்கும்பல் தலைவனும்,இ. முகமது இம்ரான் என்ற பாதாள உலககக் கும்பல் உறுப்பினரும் நடத்தியதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொகனன் ஒலுகலவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
முக்கிய சந்தேக நபருக்கு துப்பாக்கியையும் ஆயுதங்களையும் பாதுகாப்பான முறையில் வழங்கி, அவரைக் கொலை செய்ய அழைத்துச் சென்று, கொலைக்குப் பிறகு துப்பாக்கியையும் ஆயுதங்களையும் பாதுகாப்பாகத் திரும்பப் பெற்றதில் போம்புவல நவீன் ஈடுபட்டிருந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய சந்தேக நபரான இம்ரான், களுத்துறை, விக்கிரமசிங்க பகுதியைச் சேர்ந்தவர், மற்றைய சந்தேக நபர் எஹெலியகொட, தலவிட்டியா பகுதியைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொலைச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கிதாரிகள் மற்றும் பிற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு நடவடிக்கைப் பிரிவு சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan