அடுத்த ஜென்மத்தில் பலிக்கு ஆளாகாதே! மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாய் கதறல்
தனியார் வகுப்புகள் காரணமாக சமய ரீதியிலான வகுப்புக்களை புறக்கணிக்கும் பிள்ளைகளால் ஒழுக்கக்கேடான சமூகம் உருவாகியுள்ளதாக நாகொட ஜயவர்தனராமவின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய தொடங்கொட விதுரஞான தேரர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை - நாகொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த திஹார நிர்மானி நிஸ்ஸக சில்வா என்ற பாடசாலை மாணவியின் இறுதிக்கிரியைகள் நேற்று (09) இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மாணவியின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது தொலைபேசி பாவனையினால் சமூகத்தில் குழந்தைகள் பலவிதமான தவறுகளுக்கு ஆளாகின்றார்கள். மரணம் என்பது சகஜமான விடயம் என்றாலும், இந்த மரணம் நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேசப்படுகின்றது. இது ஒரு முக்கிய செய்தியை தருகின்றது.
தனியார் வகுப்புகள் காரணமாக சமய ரீதியிலான வகுப்புக்களை புறக்கணிக்கும் பிள்ளைகளால் ஒழுக்கக்கேடான சமூகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே இன்று ஒரே மகளின் அகால மரணத்தைத் தாங்க முடியாமல் தாய் கண்ணீர் விட்டு அழுந்துக்கொண்டிருக்கிறாள் என்றும் தெரிவித்துள்ளார்.
தாயார் வெளியிட்ட தகவல்
குறித்த மாணவியின் இறுதிக்கிரியையின் போது தாயார் வெளியிட்ட தகவல்,
எனது மகள் சட்டத்தரணியாகனும் என்ற ஆசையில் சுற்றித்திரிந்தாள். இந்த மரணத்தை நம்ப முடியவில்லை. அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து பிறக்கலாம் மகளே. இந்த மாதிரியான பலிக்கு இனியும் ஆளாகாதே என்றும் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கொட்டும் மழையில் நாகொடை, அட்டாவில பொது மயானத்திற்கு மாணவியின் சடலம் கொண்டு செல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
களுத்துறை - நாகொட பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து வீழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகளால் ஐந்து மாடிக் கட்டிடத்தின் பின்னால் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் திஹார திராணி நிஷங்க சில்வா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்த பாடசாலை மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் கடந்த 6ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
குறித்த குழுவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஹோட்டலுக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் ஹோட்டலை ஒட்டியுள்ள தொடருந்து தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் காலி பிரதேசத்தில் பதுங்கியிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.