சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தினால் விபத்தில் சிக்கிய வாகனம்! ஒருவர் பலி - மற்றொருவர் காயம்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம்
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்று கொண்டிருந்த சிறிய ரக வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி தலைகீழாக புரண்டுள்ளது.
இதில், லொத்தர் விற்பனை நிலையம் பலத்த சேதமடைந்து கடை தரைமட்டமாகியுள்ளன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதியும், லொத்தர் கடை உரிமையாளரும் உடனடியாக மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி வாகன சாரதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கமகே சுனில் சாந்த (63 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேவேளை, விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் லொத்தர் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான மூர்த்திதம்பி வேணு தாஸ் (56 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






