காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...!
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்து சென்ற நிலையில் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.
தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல், சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யா வண்ணம் பாதுகாத்தல், பௌத்தமயமாக்கலை தடுத்தல், தமிழர் நிலப் பரப்பில் இடம்பெறும் குடியேற்றங்களை தடுத்தல், யுத்த காலத்தின் போதும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என பல பிரச்சனைகள் உள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
இவை அன்றாடம் அவர்களது வாழ்வியலில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது ஏனையவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதும் ஆகும்.
இலங்கை நாட்டைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிசார் மற்றும் புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரிலும், சுற்றி வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கு அமைய பலர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக்கப்பட்டோராகவுள்ளனர்.
சுமார் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.
இதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்களுக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் மத்தியில் பதற்றத்தினையும், ஏமாற்றத்தினையும் கொடுத்து இன்று வரை அவை கானல் நீராகவே உள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்படுவோர் குறித்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் புறச் சூழல் எதுவும் காணப்படவில்லை.
ஆனால் இன்று யுத்தம் முடிந்து 16 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் உள்ள முன்னேற்றம் என்பது கண்துடைப்புக்களுடனேயே உள்ளது. தற்போதைய அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது தேர்தலின் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில் இன்று ஆட்சி பீடம் ஏறி மாதங்கள் பல கடந்த நிலையிலும் அது குறித்து மௌனமாக இருப்பது கடந்த அரசாங்கத்தை போன்றே இவர்களது செயற்பாடும் அமையப் போகின்றது என்ற சந்தேகத்தையே தோற்றிவித்துள்ளது.
சந்திரிகா, ரணில் மற்றும் மைத்திரி கூட்டரசாங்கம்
கடந்த அரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றினையும் நிறுவியுள்ளது.
ஆயினும் சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், கால நீடிப்புக்கள் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்யவதற்காகவும் இவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, அதில் எந்த முன்னேற்றத்தையும் அவதானிக்க முடியவில்லை. அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி கண்ணீரால் காயத்தை ஆற்றிவிடலாம்.
அவர்களுக்குரிய கிரியைகளை நடத்தி ஆத்ம சாந்திக்காக வழிபடலாம். ஆனால் தம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா? என தினம் தினம் எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது.
இந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது. அந்த உச்சகட்ட துயரத்துடனேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகள், தமது கணவன்மார், மனைவிமார், உறவுகள் மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை எண்ணி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கால நீடிப்புக்களும், இழுத்தடிப்புக்களும் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் யாருக்கு பொறுப்புக் கூற போகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைத்து திரிந்து நாளாந்தம் போராட்டம் நடத்திய தாய்மார்கள் மரணித்திருக்கின்றார்கள்.
அவர்கள் தமது பிள்ளைகளின் முடிவு தெரியாமலேயே தமது உயிரையும் மாய்த்து விட்டார்கள். இந்த நிலையை நீடிக்க விடுவதா அல்லது அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா என்பதை தமிழ் தலைமைகள் உணரவேண்டும்.
வடக்கு- கிழக்கு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் ஆண்டுகள் பல கடந்தும் நீண்டுகொண்டிருக்கிறது.
அவ்வப்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றும் வருகின்றன.
மக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து கொண்டிருக்கின்றன. போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசியக் கட்சிகளால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தமிழ் உறவுகள்
அந்த மக்கள் அரசாங்கம் மீதும், தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தி கொண்டவர்களாக மாறியிருக்கின்றார்கள். தொடர் போராட்டங்களால் உடல், உள ரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் சிறைச்சாலைகளிலும், இராணுவ தடுப்பு முகாம்களிலும் மற்றும் சித்திரவதைக் கூடங்களிலும் இருப்பதாக ஆதாரங்கள் பலவும், தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில் கூட அவர்களை விடுவிப்பதற்கும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் சர்வதேச அழுத்தத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பதில் அளிக்க வலியுறுத்தும் நிலையில் தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக ஒற்றுமையாக செயற்படாமை என்பது நம்பிக்கையோடு இருக்கும் அந்த மக்களின் மனங்களில் பலத்த சலனங்களை உருவாக்கியிருக்கிறது.
நாடு கடந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் கூட தமது நாட்டையும், மக்களையும் நேசித்தவர்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற உரிமைப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்.
அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்திய மாபெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதில் பல ஈழ உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தார்கள்.
ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட அந்த மக்களது வாக்கில் பதவிகளையும், சொகுசு வாழ்க்கையும் பெற்று வலம் வரும் அந்த மக்களின் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாகவே இருக்கிறது.
காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் ஐ.நா பரிந்துரையை ஏற்று கடந்த கால அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோருக்கான செயலகம் உருவாக்குதல் மற்றும் நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும் என்ற பெயரிலான அந்த சட்டம் நடைமுறைக்கும் வந்துள்ளது. இருப்பினும் அந்த அலுவலகம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், மனிதவுரிமையாளர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த அலுவலகத்தின் கடந்த கால செயற்பாடுகளைப் பார்க்கின்ற போதும் அது வெறும் கண்துடைப்பு அலுவலகமாகவே அமையப் போகின்றது என்பது புலனாகின்றது. ஆக, இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இந்த அரசாங்கம் சிரத்தையுடன் கையாள்வதாக தெரியவில்லை.
இரகசிய தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் என தடுத்து வைக்ப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைக்க வேண்டும். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் உயிருடன் இந்த காலப்பகுதியில் உழைத்திருக்க கூடிய பணத்தை வழங்குவதன் மூலமும் அவர்கள் கொல்லப்பட்ட காலப்பகுதியில் இருந்து அவர்களுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை என்றாலும் குறைந்த பட்சம் தீர்க்க முடியும்.
ஒரு உயிருக்கான விலை பணம் என்பது அல்ல. ஆனால் கொல்லப்பட்டிருந்தால் அதற்குரிய பரிகாரமாக இழப்பீடு வழங்கப்படுவதும் அந்த கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே. இதன் மூலமே மீள நிகழாமையை உருவாக்க முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 02 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
